Wednesday, November 20, 2013

About Superstition by Periyavaa

Courtesy: Sri.Mayavaram Guru
 
பகுத்தறிவு - மூடநம்பிக்கை (Superstition - Rationality) பற்றி மஹா பெரியவா
அத்ருஷ்ட பலனை நம்பால் பிரத்யக் பலனை மட்டும் பார்த்து அநேக விஷயங்களை "ஸூபர்ஸ்டீஷியன்" என்று தள்ளுகிறார்கள் என்றாலும் இவர்களுடைய பகுத்தறிவு ('ரீஸன்') படி பதில் சொல்ல முடியாத அநேக "ஸூபர்ஸ்டீஷியனை" இவர்களே உண்டாக்கிக் கொண்டும், பின்பற்றிக் கொண்டும்தான் இருக்கிறார்கள்!

'ஜெய் ஹிந்த்' என்று சத்தம் போட்டு விட்டால் அதில் என்ன பிரத்யேக்ப் பலன்? இப்படிக் கத்துவதால் தேசம் ஸுபிக்ஷமாய்விடுமா என்ன? ஆனாலும் ''மந்த்ராஸ்'' என்று கேலி பண்ணுகிற பிரதம மந்திரியே *பிரஸங்கம் பண்ணி முடித்தவுடன், "ஜெய் ஹிந்த் கோஷிக்க வேண்டும்; இன்னும் பலமாக கோஷிக்கணும்; இது கூடப்போதாது" என்று மூன்று நாலு தரம் ஜனங்கள் தொண்டை கொண்ட மட்டும் கத்தச் சொல்கிறாராம்!

நம் தேசத்தில் மட்டுந்தான் என்றில்லை Faith -ஐ (நம்பிக்கையை)க் குலைத்து அதனிடத்தில் reason -ஐ (பகுத்தறிவு என்கிற வெறும் புத்தி தர்க்கத்தை) வைத்து, நம்மையும் இப்படியிழுத்து விட்டிருக்கிற எல்லா தேசத்திலுமே இப்படியிருக்கிறது. 

Rational -ஆகப் பார்த்தால் flag (கொடி) என்பது என்ன? ஏதோ ஒரு துணிதானே! அதன் மீது துப்பினால் அது தேசத்ரோகம் என்றால், இது த்ருஷ்ட பலனா என்ன? ஆனாலும் இப்படிப் பண்ணுகிறவனுக்கு த்ருஷ்ட பலனாகவே ஜெயில் தண்டனை கொடுக்கிறார்கள்.

மந்த்ரபூர்வமாய் ஒரு ப்ரதிமையில் தெய்வத்தை ஆவாஹனம் பண்ணிப் பூஜை பண்ணுவதைக் கேலி செய்துவிட்டு, ஒரு துணிதான் தேசத்துக்கு ஸிம்பல் என்றால் அது எப்படி? புண்யகாலமாவது, புண்ய க்ஷேத்ரமாவது என்று சொல்லிவிட்டு நாஸ்திகப் பிரசார விழாக்களைக்கூட புத்தர், அம்பேத்கர் பிறந்த நாளில் பண்ணுகிறார்கள்! ஈரோட்டில், காஞ்சீபுரத்தில்தான் ஆரம்பவிழா என்கிறார்கள்! அதாவது அவர்களும் ஏதோ ஒரு 'புண்ய'- இப்படிச் சொல்வது எனக்கே வேடிக்கையாகத்தான் இருக்கிறது!- புண்யகாலம், க்ஷேத்ரம் இவற்றில் நம்பிக்கை வைத்துத்தானிருக்கிறார்கள்! ரொம்ப விசித்ரம், 'ஸமாதி', 'ஸமாதி'என்கிற பேர் வைத்து (நாம் ஏதோ வருஷத்தில் ஒருநாள் திருவையாறு, நெரூர் மாதிரி இடங்களில் *ஆராதனை நடத்துகிறோம் என்றால்) அவர்களோ நித்தியப்படி ஆராதனையே பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்! ஆஸ்திகர்களாயிருக்கிற சட்டசபைக்காரர்கள் பதவிப் பிரமாணத்துக்கு முந்தி கோயிலுக்குப் போகாமலிருந்தாலும் இருப்பார்கள்; போய்விட்டு வந்தாலுங்கூடச் சொல்வதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு இருந்தாலும் இருப்பார்கள்; ஆனால் இவர்கள் (பகுத்தறிவாளர் என்று சொல்லிக் கொள்கிறவர்கள்) 'ஸமாதி' என்கிறார்களே அதற்கு ஊர்வலமாகப் போய் மரியாதை பண்ணிவிட்டு வராமல் swearing-in செய்வதேயில்லை.

வெறும் ரீஸன் என்று மட்டும் எடுத்துக் கொண்டால் அதற்குப் பொருந்தாத அநேக விஷயங்களை எவருமே பண்ணத்தான் வேண்டியிருக்கிறது; அப்போதுதான் நம்முடைய லக்ஷ்யத்தில் நமக்கு ஒரு ஆர்வத்தை, ஈடுபாட்டை எழுப்பி அதற்கு மற்றவர்களின் ஆதரவையும் திரட்டமுடிகிறது. இதற்குச் சின்னங்களும் காரியமும் இருந்தேயாக வேண்டியிருக்கிறது. இப்படி கறுப்பு-சிவப்பு அல்லது கதர் போட்டுக் கொண்டு கொடியையும் ஸ்லோகன் அட்டையையும் தூக்கிக் கொண்டு பாத யாத்திரை, ஸைகிள் ஊர்வலம், மாட்டுவண்டி ஊர்வலம் என்று நடத்தும்போது இதில் பகுத்தறிவுக்குச் சேராத எத்தனை விஷயம் இருக்கிறது என்று பார்ப்பதில்லை. 

அதுவே பஞ்சகச்சம், பரிவட்டம், ஜால்ரா, நாமகீர்த்தனம் என்று பஜனை கோஷ்டி போனால் பரிஹாசமாகிறது. பொலிடிகல் இன்டரஸ்ட் (அரசியல் ஈடுபாடு), லேபர் இன்டரஸ்ட்  என்பதுபோல இந்த லோகத்தை மட்டுமே சேர்ந்த விஷயங்களுக்காக இப்படி ரீஸனை விட்டுவிட்டு, மண்ணெண்ணெய் கொட்டிக் கொளுத்திக்கொண்டு உயிரை விடுகிற அளவுக்குப் போனால், martyr [தியாகி] பட்டம் கொடுக்கிறார்கள் ! அதுவே சாஸ்வதமான தர்மத்துக்காக, மதத்துக்காக விட்டால், "ஸூபர்ஸ்டீஷியன்", "அசடு" என்று மட்டம் தட்டுகிறார்கள்.

"நாமே பெரியவர்கள்; நமக்கு status வேண்டும்; நாம் எதற்கும் கட்டுபடக்கூடாது; இஷ்டப்படி பண்ண வேண்டும்; நம் புத்திக்குப் புரிவதற்கு மேலே எதுவும் கிடையாது; எதையும் ஒப்புக்கொள்ள முடியாது. புத்திக்குப் பொருந்தாமலே நாமேகூட அநேகம் பண்ணினாலும் பண்ணுவோம் - ஆனாலும், சாஸ்த்ரக்காரர்கள் சொல்கிறார்களென்றால் அப்போது மாட்டோம்" என்று இந்த ரீதியில் பலபேரையும் நினைக்கும்படியாக்கி, இந்த லோகத்தில் நடைமுறை வாழ்க்கையிலும் ஒழுங்கு இல்லாமல் பரலோகத்துக்கும் வழியில்லாமல் ஒரேயடியாகக் குன்றி வைத்திருப்பதுதான் ஆசாரங்களைக் கைவிட்ட்ருப்ப்பதன் பலன்.

"Awake, awake !" என்று இவர்கள் [சீர்திருத்தக்காரர்கள்] ஜனங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். "அசட்டு சாஸ்த்திரத்தை நம்பி அறியாமையில் தூங்கிக்​கொண்டிருக்கிறார்களே, முழித்துக் கொள்ளுங்கள் !" என்கிறார்கள். எனக்கோ இப்படி விழித்துக்கொண்டு தேசத்தில் நடக்கிற வெறியாட்டத்தைப் பார்க்கிறபோது, மறுபடி நம் அசட்டு சாஸ்த்ரத்தைத் ​தூக்கமருந்து மாதிரி இவர்களுக்கு எப்படியாவது கொடுத்துத் தூங்க பண்ண மாட்டோமோ என்று இருக்கிறது.

சீர்திருத்தம் ​என்று சொல்லிச், சீராக இருந்ததை ஒழுங்கில்லாமல் ஆக்கியிருக்கிறார்களே; தாங்களாகத் திருந்தியவர்களைத் தப்புகளில் இழுத்துவிட்டிருக்கிறார்களே என்று நினைக்கிறபோது, ஏற்கனவே விழித்துகொண்டிருந்தவர்களை இப்போதுதான் தூங்கப் பண்ணியிருக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. 

வாஸ்தவத்தில் ரிலிஜன் ஓபியமேயில்லை(Religion is the opium of the people என்பது கார்ல் மார்க்ஸ் கூற்று. மதமானது அபினைப்போல் மக்களை மயக்கிவிடுவது எனப்பொருள்.). அதுதான் "லோகமே நிஜம்; இங்கே நாம் பார்க்கிறதுக்கும், அநுபவிப்பதற்கும் மேலே எதுவும் இல்லை" என்று இந்திரிய மயக்கத்தில் தூங்கிக்கொண்டிருப்பவர்களை, மயக்கம் தெளிவித்து, எழுப்புகிற மருந்து சீர்திருத்தம் என்று சொல்லிக்கொண்டு இயக்கங்கள் ஆரம்பித்த நாளாகத்தான், கொஞ்ச நஞ்சம் இப்படி தெய்வ ஸம்பந்தமாக விழித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் அபேதவாத அபினைக் கொடுத்து மயங்கப்பண்ணியிருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.

1 comment:

  1. Many people forget that sasthras,Vedas ,some rituals,practices are excellent experimented sciences and technology,of our ancestors with high tech results.branding them as Supersitions are purely total ignorances,and those practicing rationionlists follow garlending,celebrating their birthdays, and a lot more.those rationalists are doing this for their own popularities,and trying to cheat the public for vote banks,favoritism,etc....in fact 99 % of the rationalists are practicing various rellegions personally in their Homes.....even though I do not know Vedas,sastras,even to one by billions of atomic level,the fact that they are higher forms of experimented science and technology is beyond anybody's doubt's .

    ReplyDelete